புதுச்சேரி அருகே சிறார் திருமணத்தை தடுத்து நிறுத்திய பொலிசார், அவர்களின் பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மணமகளான 17 வயதான சிறுமியை ஒரு தலையாக காதலித்த மைனர் சிறுவனே இந்த விவகாரத்தை பொலிசில் கூறியதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவனும் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியும் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.
இதைஅறிந்த இருவீட்டு பெற்றோர்களும் சம்மதித்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். உறவினர்கள் அனைவரும் திருமண பத்திரிகை கொடுக்கப்பட்டது. அதன்படி, தொண்டமா நத்தத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் இன்று நடப்பதாக இருந்தது.
அதற்கு முன்னதாக நேற்றிரவு திருமண வரவேற்பு நடக்க இருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்த மற்றொரு நபர் குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக குழந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து குழந்தைகள் குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வில்லியனூர் பொலிஸ் உதவியுடன் தொண்டமாநத்தம் சென்றனர். இருவீட்டாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். கிடைத்த தகவல்கள் உண்மை தான் என்று உறுதிப்படுத்தினர்.
திருமணத்தை நிறுத்துமாற கூறிய அவர்கள் 18 வயது ஆன பிறகு திருமணம் செய்து வைக்குமாறு கூறினர். பெற்றோர்கள் ஏற்றுக் கொண்ட தையடுத்து இரு வீட்டாரிடம் எழுதிவாங்கி கொண்டனர். அதனால் சிறார் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருமணம் நிறுத்தப்பட்டது தெரியாத உறவினர்கள் மண்டபத்துக்கு வந்தனர். அவர்கள் திருமணம் நிறுத்தப் பட்டதை அறிந்து பின்னர் ஏமாற்றத்துடன் சென்றனர்.