வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை 155 பட்டதாரிகளே தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன
நியமனம் பெற்ற பட்டதாரிகள் வேறு அரச பணிகளில் உள்ளார்களா மற்றும் நியமனம் வழங்கும் இடத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படாமை உள்ளிட்ட முறையற்ற நேர்முகத் தேர்வு நடவடிக்கைகளே இவ்வாறான சம்பவங்கள் நிகழக் காரணம் என கூறப்படுகிறது. இதனால், தகுதியும் பணியிட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணியாற்றக்கூடிய ஆர்வமும் இருந்தும் பல பட்டதாரிகள் முறைகேடுகள் காரணமாக வேலையற்று இருப்பதாகவும், சுட்டிக்காட்டப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் 2019-01-26 அன்று வேம்படி மகளிர் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்ட நியமனத்தின்போது மொத்தம் 249 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்களில் அதிக பட்சமாக கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு 48 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் நேற்றுவரையில் 32 ஆசிரியர்கள் மட்டுமே பணியினைப் பொறுப்பெடுத்துள்ளனர்.
இதேபோன்று மடுக் கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்ட 45 ஆசிரியர்களில் 31 பேர் மட்டுமே கடமையினை பொறுப்பேற்றுள்ளனர். இதேநேரம் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்ட 41 ஆசிரியர்களில் 37 ஆசிரியர்களும், மன்னார் கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்ட 29 ஆசிரியர்களில் 20 ஆசிரியர்களுமே, கடமையை பொறுப்பேற்றுள்ளனர். இதேபோன்று துணுக்காயில் 24 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் 13 பேரும், வவுனியா தெற்கில் 17 பேரில் ஆறுபேர் மட்டுமே நேற்றுவரை கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.
வவுனியா வடக்கிற்கு நியமித்த 19 ஆசிரியர்களில் 12 பேரும் கடமைகளைப் பொறுப்பெடுத்துள்ள நிலையில் வடக்கில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் இதுவரையில் 94 பேர் கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது தெரியவருகின்றது.
பட்டதாரிகள் பலர் வேலை இல்லை எனப்போராட்டம் நடத்தும் நிலையில், நியமனம் பெற்ற பலர் வெளி மாவட்டங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்லப்பின்னடிப்பதால் பலரின் வாழ்க்கை பாழடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.