வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). இவர் 10 வருடங்களாக அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ரமேஷ் வழக்கம்போல் பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குன்றம் அருகே திடீரென ரமேஷ்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
வலி தாங்கமுடியாமல் அவர் ஒட்டி சென்ற அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு தன்னுடைய இருக்கையிலே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பயணிகள் மற்றும் நடத்துனர் உடனடியாக ஆட்டோ மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ரமேஷை கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஓட்டிய பேருந்தில் சுமார் 53 பயணிகள் பயணித்து உள்ளனர். இறக்கும் தருவாயிலும் 53 பேர்களின் உயிரை காப்பாற்றிய அந்த ஓட்டுநருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அப்பேருந்தில் பயணித்த பயணிகள் கூறினர்.
அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் இறப்பு ஓட்டுநர்களின் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.