ஓய்வூதியத்திற்காக நடையாய் நடக்கும், ஓய்வு பெற்ற குத்து சண்டை வீரர்….! கை கொடுக்குமா அரசு?

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுவேல்சாமி (வயது 69). இவர் பளு துாக்கும் சாம்பியன்.1977-ஆம் ஆண்டு, கல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு துாக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இவர் சிறந்த குத்துச் சண்டை வீரரும் கூட.

ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பளு துாக்கும் போட்டியில், 3-வது இடத்தைப் பெற்றார். பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, ஒரு 7 மாதம் தான், இவருக்கு, ஓய்வூதியம் வழங்கப் பட்டிருக்கிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 44 மாதங்கள் இவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால், இவர் அந்த நிலுவைத் தொகை ஓய்வூதியத்தைப் பெற்றிட, தலைமைச் செயலகத்துக்கு நடையாய் நடக்கிறார். ஆனால், அதிகாரிகள் யாரும், இவர் குறையைக் கண்டு கொள்ளவேயில்லை. அமைச்சர்கள் யாரையும், இவரால் பார்க்க இயலவில்லை. அவர்களின் உதவியாளர்கள் தடுத்து விடுகின்றனர்.

வயதான காலத்தில் வறுமையில் வாடும் பொன்னுவேல்சாமி கூறுகையில்,

2013-ஆம் ஆண்டு 110 கோடி ரூபாய்க்கு மேல், விளையாட்டு ஆணையத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதில் தகுதி விதி முறையை மீறி செயல் பட்டுள்ளார்கள்.

2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில், 7 மாத நிலுவை ஓய்வூதியம் வழங்கப் பட்டது. ஆனால், அதற்குப் பிறகு, 44 மாதங்களுக்கு எனக்கு வரவேண்டிய ஓய்வூதியத் தொகை இது வரை கிடைக்கவில்லை.

இது குறித்து, முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், எந்த பதிலும் வரவில்லை. நான் தற்போது வருமானம் ஏதும் இல்லாமல் வறுமையில் சிக்கித் தவிக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும், கடன் வாங்கி, சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று வருகிறேன். யாரும், என் குறையைக் கேட்கக் கூட மாட்டேன் என்கிறார்கள், என்று மிகவும், மனம் நொந்தபடி பேசினார்.

44 மாத நிலுவைத் தொகையைக் கொடுத்து, உதவ வேண்டும், என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார்.