`காதலைவிட நாய்தான் முக்கியம்’ – மனைவி வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில், செல்லமாக வளர்த்த நாயைக் கொன்ற காதல் கணவர்மீது போலீஸில் புகார் கொடுத்த அழகுக்கலை நிபுணர் செல்வி, ‘எனக்குக் காதலைவிட நாய்தான் முக்கியம்’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரி, சாரதிநகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாத், வீட்டில் செல்லமாக வளர்த்த நாயை அடித்துக் கொலை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜெகநாத் மீது புகார் கொடுத்த அவரின் மனைவி செல்வி, போலீஸாரிடம் கூறிய தகவல், அவர் நாயின்மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஜெகநாத்தும் செல்வியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். ஜெகநாத், ட்ரை கிளீனிங் லாண்டரி கடை நடத்திவருகிறார்.

செல்வி, வீட்டிலேயே அழகு நிலையம் நடத்திவருகிறார். செல்விக்கு நாய் என்றால் அதிகப் பிரியம். இதனால், ‘பர்னி’ என்று அந்த நாய்க்குப் பெயரிட்டு வளர்த்துவந்தார்.

தற்போது, பர்னிக்கு 2 வயது. காதலிக்கும்போது ஜெகநாத்தும் பர்னி மீது அன்பாக இருந்துள்ளார். ஆனால் திருமணத்துக்குப் பிறகு, ஜெகநாத்தின் நடவடிக்கைகள் மாறின.

பர்னி மீது தன்னுடைய கோபத்தைக் காட்டத் தொடங்கினார் ஜெகநாத். இந்த நிலையில், மேடவாக்கத்தில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு பர்னியுடன் சென்றுள்ளார் செல்வி. இது, ஜெகநாத்துக்குப் பிடிக்கவில்லை.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, பர்னியை அடித்துள்ளார்.

அதை செல்வி தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரத்தில் செல்வியின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்துள்ளார். அவரின் பிடியிலிருந்து செல்வி தப்பி ஓடிவிட்டார்.

மனைவியின் மீதுள்ள கோபத்தில், பர்னியின் முகத்தில் கடுமையாகத் தாக்கினார் ஜெகநாத். இதில், பர்னி படுகாயமடைந்து இறந்தது.

பர்னியைத் துன்புறுத்திக் கொலைசெய்த ஜெகநாத் மீது செல்வி எங்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜெகநாத்தைக் கைதுசெய்துள்ளோம்” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் செல்வியிடம் விசாரித்தபோது, `காதலை விட நான் செல்லமாக வளர்த்த பர்னிதான் முக்கியம். அதைக் கொலைசெய்த ஜெகநாத் சிறைக்குச் சென்றால்கூட பரவாயில்லை’ என்று கூறியுள்ளார். அதன்பிறகே ஜெகநாத் மீது நடவடிக்கை எடுத்தோம் என்றார்.