பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி, மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவைப் போல மேகன் மெர்க்கலும் ஊடகங்களால் துரத்தப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் ஊடகங்கள் அவர் தொடர்பிலான செய்திகளுக்காக அவரை தொடர்வதாக கூறுப்படுகிறது.
இதுகுறித்து ஹாரி மற்றும் மேகனின் நண்பரும், ஹாலிவுட்டின் பிரபல நடிகருமான ஜார்ஜ் குளூனி பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேகன் குறித்து கூறுகையில்,
‘அவர்கள் எல்லா இடங்களிலும் மேகன் மெர்க்கலை துரத்துவதால், அவர் தொடர்ந்து துயரப்படுகிறார். அவர் ஏழு மாத கர்ப்பிணிப் பெண். டயானா விரட்டப்பட்டது போலவே அவரும் விரட்டப்படுவதால் துன்பத்திற்கு ஆளாகிறார். வரலாறு தன்னைத் தானே திருப்பிக் கொள்கிறது.
ஆனால் அது எப்படி முடிந்தது என்று நாம் பார்த்தோம். எனவே, இது எவ்வளவு கோபத்தை ஏற்படுத்துகிறது என்று என்னால் கூற முடியாது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் ஹாரி-மேகனின் குழந்தைக்கு பிதாமகனாக நீங்கள் இருப்பீர்களா என்று குளூனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இல்லை, இரட்டைக் குழந்தைகளுக்கு நான் தந்தையாக இருக்கிறேன். எனக்கு இது போதும்’ என பதிலளித்தார்.