மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை வைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “மதுரை மிகப்பழமைகளைக் கொண்ட நகரம். மதுரையின் சிறப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது.
இங்குபல சமூகம், மதங்களைச் சேர்ந்தமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மதுரை விமான நிலையத்திற்கு பல்வேறு சாதிய தலைவர்களின் பெயர்களை சூட்டுவதற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு அதுதொடர்பாக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சாதிய தலைவர்களின் பெயர்களை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டினால் அது ஏற்கத்தக்கதாக அமையாது.
ஆகவே, மதுரையின் அடையாளங்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கோவில். அதன் அடிப்படையில் மீனாட்சியம்மன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து ஆறு மாதத்திற்குள் மத்திய-மாநில அரசுகள் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.