30 அடி ஆழத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து! ஒருவர் பலி – பலர் காயம்!

நேற்று இரவு பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்வதற்காக தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றது. இன்று அதிகாலை சேலம் அருகே கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்து நிலை தடுமாறி, பாலத்தின் தடுப்புச் சுவர்களை இடித்துக்கொண்டு 30 அடி ஆழத்தில் கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 16க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தகவலறிந்த சேலம் மாநகர போலிசார் கிரேன்களின் உதவியுடன் பேருந்திணை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகினி நேரில் சென்று பார்வையிட்டார்.

பேருந்தில் அதிகப்படியான பார்சல்களை ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என்று சேலம் மாநகர ஆணையர் சங்கர் தெரிவித்தார். அதிகாலையில் அங்கு நடந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.