ஒரு எச்சரிக்கை செய்தி…. இந்தியர்களின் கலைந்த கனடா கனவு!

கனடாவில் வாழலாம் என்ற கனவுடன் பெரும் தொகை ஒன்றை செலுத்தி விட்டு காத்திருந்த மூன்று இந்திய இளைஞர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்திருக்கிறது கனடா அரசு.

இந்தியாவைச் சேர்ந்த கமல் பிரீத் சிங், அம்ரீத் கில் மற்றும் குர்ஜித் கில் ஆகிய மூவரும், மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்து, ஒட்டாவாவிலுள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து கனடாவிலேயே வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசையில் கன்ஸல்டன்சி ஒன்றை அணுகி, கர்னைல் சிங் காடியால் என்ற நபரிடம் ஆளுக்கு 39,000 டொலர்கள் செலுத்தி, வேலை வாய்ப்பு பெற்றுத்தருமாறும் அதன் மூலம் நிரந்தரமாக கனடாவில் தங்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறும் கோரியிருக்கிறார்கள் அவர்கள்.

சொன்னதுபோலவே மணிக்கு 18.48 டொலர்கள் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கடிதமும் வந்திருக்கிறது மூவருக்கும்.

மகிழ்ச்சியுடன் புலம்பெயர்தல் அலுவலகத்தில் பதிவு செய்யச் செல்லும்போதுதான் தெரிய வந்திருக்கிறது அந்தக் கடிதங்கள் போலியானவை என்று.

அதோடு நிற்காமல் ஐந்து ஆண்டுகள் கனடாவுக்குள் நுழையக்கூடாது என மூவருக்கும் உத்தரவிடப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் மூவரும்.

கனடாவில் வாழலாம் என்ற ஆசையிலிருந்தவர்களின் கனவு கலைந்ததோடு, கெட்ட பெயருடன் இனி நாட்டுக்குள்ளும் நுழையக்கூடாது என உத்தரவிடப்பட்ட நிலையில் மனம் நொந்து போய் இந்தியா திரும்பியிருக்கிறார்கள் மூவரும்.

பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என அலைந்தும் நீதி கிடைக்காத நிலையில், இறுதியாக சிறு கோரிக்கைகள் நீதிமன்றம் ஒன்று அவர்களது வழக்கை ஏற்றுக் கொண்டு விசாரித்ததில், கர்னைல் சிங் காடியால் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர்களது பணத்தை திருப்பியளிக்குமாறு கர்னைல் சிங் காடியாலுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

இது தொடர்பாக கர்னைல் சிங் காடியாலை தொடர்பு கொண்டபோது, தான் அப்படி ஒரு கன்ஸல்டன்சியே நடத்தவில்லை என்றும், தான் திருமணப்பொருத்தம் பார்க்கும் நிறுவனம் ஒன்றையே நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளான் கர்னைல் சிங் காடியால்.

எப்படியும் பணம் கிடைத்துவிடும் என்றாலும், தங்கள் கனடா கனவு கலைந்து போனதில் மிகுந்த துக்கத்துக்குள்ளாகியிருக்கிறார்கள் மூவரும்.

வெளிநாட்டில் வேலை வேண்டும் என்ற ஆசையில், முறையாக பதிவு செய்யப்படாத கன்ஸல்டன்சிகளை நம்பி ஏமாறுவோருக்கு இது ஒரு எச்சரிக்கை.