தங்க தமிழ்செல்வன் சகோதரனின் கந்து வட்டி அடாவடி…., தற்கொலை முயற்சி செய்த பெண்….!

சட்டம் போட்டும், இன்னும் தமிழகத்தில், கந்து வட்டிக் கொடுமைக்காரர்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத் தேவன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 50). இவரது கணவர் இதே ஊரில், ஊராட்சி அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

இதே ஊரில் வசிக்கிறார் தாமரைச்செல்வன். இவர் அ.ம.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரான, தங்கத்தமிழ்செல்வனின் மூத்த சகோதரர். இவரிடம் மாத வட்டிக்கு 2.50 லட்சம் ரூபாய் பணம், ஐந்து மாதங்களுக்கு முன்பாக, கடன் வாங்கி இருந்தார் செல்வி. மேலும், சிலரிடம் கடன் வாங்கி உள்ளார்.

கடந்த சில மாதங்களாக, உடல் நலம் சரியில்லாத காரணத்தால், செல்வியால் கடையை நடத்த இயலவில்லை. எனவே, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், தாமரைச் செல்வன், செல்வியின் வீட்டிற்குச் சென்று, அவர் வட்டிப் பணம் தராமல் இருந்ததாற்காக, ஆபாசமாகத் திட்டியதோடு, வட்டிப் பணம் வரவில்லை, என்றால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதனால், கடன் வாங்கிய செல்வி மனம் உடைந்தார். கணவர் வெளியே சென்றிருந்த சமயம், விஷத்தைக் குடித்து விட்டார் செல்வி. இதனால் வாயில் நுரை தள்ளி மயங்கி கீழே விழுந்தார்.

அப்போது, வீட்டிற்குள் நுழைந்த அவரது மகன் அசோக்குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், செல்வியை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை, என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

இது குறித்து, அசோக்குமார், நாராயணத்தேவன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தாமரைச்செல்வன் உட்பட நான்கு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.