ஜெயலலிதா பிறந்தநாளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24-ம் தேதி வரவுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

அதற்காக சென்னையில் பேனர்கள் வைக்க அனுமதி கோரி அதிமுகவின் சார்பில் வட சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில் பேனர்கள் வைப்பதற்கு எதிரான டிராபிக் ராமசாமியின் மனு விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சாலைகள், சாலையோரங்களில் இருபுற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் அரசியல் கட்சியினர் சட்டவிரோதமாக வைக்கும் பேனர்களை அகற்ற முடியவில்லை என்றால், அரசு அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் கட்சிகளில் சேர்ந்துவிடலாம் எனவும் நீதிபதிகள் கடுமையாக விளாசினர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்க மறுத்துள்ளனர். மேலும் பாலகங்கா அளித்த மனுவையும் நிராகரித்தனர்.

பாலகங்காவின் மனு குறித்து தமிழக அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.