ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து என்பவர், மதுபான கடைகளுக்கு எதிராக எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், இந்த மதுபான கடைகள் மட்டும் மூடியதே இல்லை.
இதனால் இந்த கடையை அகற்றும்படி மாவட்ட கலெக்டருக்கு கடந்த ஜனவரி 21-ந் தேதி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதன் பின் இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் உள்ள மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மது கடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மது கடை உள்ள இடத்துக்கு அருகே தான் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் இந்த இடம் வழியாக செல்லும் சாலையை தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பயன்படுத்துகின்றனர்.
வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர்.
விவசாய நிலத்திற்கு அருகே மதுபான கடை உள்ளதால், விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. அதனால், விவசாய நிலத்தில் உள்ள இந்த மதுபானக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘குற்றம் சாட்டப்பட்ட இந்த மதுபானக்கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும்.
அது குறித்த அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அதேநேரம், தமிழகம் முழுவதும் எத்தனை டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் விவசாய நிலங்களில் உள்ளது? என்ற விரிவான அறிக்கையையும் வருகிற 20-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டார்.