காதலர் தினத்தில் மாணவர்கள் ஒன்றாக எடுத்த சபதம்!

குஜராத் மாநிலத்தில் 10,000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாங்கள் காதலித்தாலும் கூட பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என சபதம் எடுத்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் காதலித்து வரும் ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி கொள்ளும் விதமாக இன்று காதலர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில் ஒவ்வொரு காதலர்களும் வினோதமாக ஏதேனும் ஒரு சபதத்தை எடுப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை குஜராத்தை சேர்ந்த சில மாணவர்கள், அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஒரு சபதத்தினை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து ‘Laughter club, Crying club’ என்னும் அமைப்பை நிர்வகித்து வரும் சிரிப்பு சிகிச்சை நிபுணரான ஹஸ்யமேத்வா ஜயதே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

என்னிடம் பல இளைஞர்கள் தங்களுடைய மனஉளைச்சல் பற்றி பேசுவதற்காக வருவார்கள். அதில் பெரும்பாலான இளைஞர்கள், தங்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மறுப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்காக நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதில், 20 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக இணைந்து, தங்களுடைய பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வோம் என சபதம் எடுக்க உள்ளனர்.

இதில் 10,000 மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். முதலில் 17 வயதிற்கு மேல் உள்ள மாணவர்கள் மட்டும் தான் இதில் பங்கேற்க வேண்டும் என நான் கூறியிருந்தேன். ஆனால் அது தற்போது அவசியமில்லை.

மாணவர்கள் சபதம் எடுப்பதை அந்ததந்த பள்ளி நிர்வாகம் வீடியோவாக எடுத்து எங்களுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.