காதலர் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாதியை வென்ற காதல் கதையை பற்றித் தான் பார்க்க போகிறோம்.
குஜராத்தின் ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்த பெண் ஷில்பா, பேஸ்புக்கில் ரவீந்திரா என்பவருடன் நண்பராகி நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் காதலால் கசிந்துருக, ரவீந்திரா தலித் இளைஞர் என்பது ஷில்பாவுக்கு பெரிய விடயமாக தெரியவில்லை.
தன்னுடைய குடும்பத்தில் அதிக கட்டுப்பாடுகள், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
ஷில்பா வசிக்கும் தெருவில் கூட தலித்துகள் நடமாட கூடாதாம், இருப்பினும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்காமல் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் பிடிப்புடன் இருந்தனர்.
ஒருநாள் பைக்கில் சென்ற ரவீந்திரா ஷில்பாவை அழைத்துக் கொண்டு வர திருமணமும் முடிந்து விட்டது, அதீத பிரச்சனைகளே அன்று தான் ஆரம்பமானது.
வீடும் கைவிட, வேலையையும் இழந்து தினக்கூலியாக பணியை தொடங்கினார்கள், இதுமட்டுமா வாடகைக்கு கூட வீடு கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் வேறு வேறு சாதி என்று தெரிந்தவுடன் தெரு தான் வீடான நிலை.
இப்படியே தொடர, ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒருநாள் இருவரும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிய போதுதான், தெளிவு கிடைத்தது, பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதில் எந்தவித பயனும் இல்லை, பிரச்சனைகளை இருவரும் இணைந்து சமாளிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
அன்று முதல் அழுகையை நிறுத்து புன்னகையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள தொடங்கினார் ஷில்பா, தற்போது மாற்று சாதியில் திருமணம் செய்யும் எத்தனையோ ஜோடிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றார்.
கல்வியறிவு இல்லாத ஏழை மக்களுக்காக சட்டப்படிப்பு படித்து வருகிறாராம் ரவீந்திரா, ஒருநாள் தன்னுடைய அப்பா தங்களை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறாராம் ஷில்பா.