பிப்ரவரி 14 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில், காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி தங்களது துணையை மகிழ்ச்சி படுத்தி கொண்டிருக்கின்றனர்.
உல்லாச இடங்களுக்கு செல்வது, பல்வேறு விதமான பொருட்களை வாங்கி மகிழ்வது, திரையரங்குகள் செல்வது, ரோஜாக்கள் கொடுத்து காதலை தெரிவிப்பது, சாக்குலேட்டுகள் வழங்குவது என பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், குஜராத்தை சேர்ந்த சில இளைஞர்கள் இதற்கு மாற்றாக இந்த தினத்தை கொண்டாடி உள்ளனர். அகமதாபாத் முதியோர் இல்லம் ஒன்றில் அவர்கள் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும், அங்கிருந்த முதியவர்களுடன் ஆடிப்பாடி தங்களது காதலர் தின கொண்டாட்டத்தை அவர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் பங்கேற்ற இளைஞர் ஒருவர்,” நம்மில் பலரின் முதல் காதலே பெற்றோர் என்பதை மறந்து விடுகின்றனர். அதனால், தான் இங்கு வந்து அவர்களுடன் கொண்டாடுகின்றோம். எங்கள் உடை அயல்நாட்டினர் போன்று இருக்கலாம்.
ஆனால், எண்ணங்களால் என்றுமே நாங்கள் இந்தியர் தான். அது தான் எங்களுக்கு பெருமையும் கூட!” என கூறியுள்ளார்.