மாணவர்களின் நலனுக்காக, நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் பல வெற்றி படங்களில் நடித்துள்ளனர்.மேலும் இவர்களுக்கென தமிழில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும் அதன் மூலம் அவர்கள் வறுமையால் கல்வி கற்க முடியாமல் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தும் ஏழை மாணவ-மாணவிகள் மேற்கொண்டு தங்களது கல்வியை தொடர உதவி செய்து வருகின்றனர்.

அதாவது ஏழை மாணவ-மாணவிகள் மேற்படிப்பு படிக்க தேவையான கல்வி கட்டணத்தை தங்களது அறக்கட்டளையின் மூலம் செலுத்தி வருகின்றனர்.மேலும் அந்த மாணவ- மாணவிகள் தங்கி படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இலவச கல்வி வழங்க தகுதியான ஏழை மாணவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு மாணவர்களை அடையாளம் காண அரசு பள்ளி ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர் கல்வி பெற அகரம் பவுண்டேஷன் கடந்த பத்தாண்டுகளாக துணை புரிகிறது. பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

2019-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்காணும் அகரம் பவுண்டேசன் அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிளஸ் டூ மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதி போடும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி 80561 34333 , 98418 91000 இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.