சென்னை வளசரவாக்கம், பாலாஜி நகரில் வசித்து வரும் ராஜேந்திர பாண்டியனின் மகன் சரவணகுமார் என்ற அபி சரவணன். இவர், பட்டதாரி,கேரள நாட்டிளம் பெண்களுடனே உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ராஜேந்திர பாண்டியன் திடீரென போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தனது மகன் அபிசரவணனை , யாரோ சிலர் காரில் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து போலீசார் அபிசரவணன் வீட்டிற்கு சென்று, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய அபிசரவணனை கண்டு அதிர்ச்சியடைந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதற்கு பிறகு போலீசார் கூறுகையில்,
நடிகர் அபிசரவணன் ,பட்டதாரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அதே படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அதிதி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதனை தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் அதிதி மேனன், தன்னை ஏமாற்றி விட்டதாக அபிசரவணன் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் அந்த வழக்கில் அவரது நண்பர்களின் பெயர்களையும் சேர்த்துள்ளார். இதனால் உன் பிரச்சினையில் ஏன் எங்களது பெயரை சேர்த்தாய் என்று கேட்பதற்காக அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதனை வெளியில் சென்று பேசிக்கொள்ளலாம் என்று கூறி அபிசரவணன் தனது நண்பர்களுடன் காரில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் யாரிடமும் கூறாமல், செல்போனை எடுக்காமல் சென்றதால் அபிசரவணன் கடத்தப்பட்டதாக அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.