சப்பாத்திக்கு குருமா! அட்டகாசமான சுவை!!

உடலிற்கு வலு சேர்க்கும் தானிய வகைகளில் கொண்டைக்கடலை மிக முக்கியமான தனியமாகும். இது மிக உறுதியான உடலை நமக்கு கொடுக்கிறது. தற்பொழுது கொண்டைக்கடலை பயன்படுத்தி குழம்பு வைப்பது எப்படி என பார்க்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

கொண்டைக்கடலை-ஒரு கப்
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1
இஞ்சி-சிறிது
பூண்டு-3 பற்கள்
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்-2 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
எலுமிச்சை சாறு-ஒரு டீஸ்பூன்
தேங்காய்-3 துண்டுகள்
கசகசா-1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை-1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்_கொஞ்சம்
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
முந்திரி_5

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும். குருமா செய்வதற்கு முன்னர் கடலையை நன்றாகக் கழுவிவிட்டு, நிறைய தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில், சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும். வெங்காயம்,தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேங்காய்,பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கிவிட்டு,அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். இவை வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு,கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

எல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும். கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.

இப்போது அருமையான,வீடே மணக்கும் கொண்டைக்கடலை குருமா தயார். இது பூரி,சப்பாத்தி,நாண்,சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.