இடைச்சொறுகலாக நடக்கும் சதிவேலை..? அம்பலப்படுத்திய வாலிபர்கள்..!

சேலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்குவதற்காக எடுக்கப்படும் கணக்கெடுக்கும் பணியில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டி மாநகராட்சி அதிகாரிகளை வாலிபர்கள் முற்றுகையிட்டனர்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசுசமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் அமைப்பினரை கொண்டு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணியினை துவங்கியுள்ளது.

இதன்படி சேலம்மாநகரம் முழுவதும் தனியார் அமைப்பை சேர்ந்தோர் ஒவ்வொரு பகுதிக்கும் வீடு, வீடாக சென்று பயனாளிகளின் ஆதார்அட்டை விவரம், வங்கி குறித்த தகவல்கள் என பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள சின்னேரி வயக்காடு என்ற பகுதியில் கணக்கெடுக்கும் பணியில்ஈடுபட்டவர்களிடம் வறுமைக்கோட்டிற்குகீழ் என்பதை எந்த அளவீடு மூலம் உறுதிசெய்கின்றீர்கள் என அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால், இதற்கு அங்கிருந்த மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தனியார் அமைப்பினர் முறையான பதிலளிக்கவில்லை.

இதையடுத்து அங்கிருந்த வாலிபர்கள் கணக்கெடுக்கும் பணியில் முறைகேடுநடப்பதற்காக வாய்ப்பு உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, 2004 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை கொண்டு சரிபார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தற்கும் கடும் கண்டனம் தெரிவித்து, கணக்கெடும் பணியினைநிறுத்திட வேண்டும் எனவும்வலியுறுத்தினர்.

தற்கிடையே, இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சாமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2004 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு பட்டியலை வைத்து கொண்டு, அந்த பட்டியலில் உள்ளவர்களை மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீதமுள்ளவர்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த கணக்கெடுக்கும் பணியில் முறைகேடு நடக்க வாய்ப்புஉள்ளதால், அதனை முறைப்படுத்திட வேண்டும். ஆகவே, நியாயவிலை கடைகளிலுள்ள பட்டியலின்படி கணக்கெடுப்பு நடத்திடவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.