சிறுமியை சீரழித்து குழந்தைக்கு அப்பாவான பாதிரியார்…

கேரளா மாநிலம் கண்ணூரில் சிறுமியை கற்பழித்த வழக்கில் பாதிரியார் ராபின் வடக்கும்சேரி என்பவருக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலச்சேரி ‘போஸ்கோ’ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள கன்னூர் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் ராபின் வடக்கும்சேரி (வயது 48) என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாதிரியார் கொடூரமாக கற்பழித்துள்ளார். சில மாதங்களில் சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பெற்றார்.

பின்னர் பொலிசாருக்கு அந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கியுள்ளார். இதை தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனை தொடர்ந்து பாதிரியார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்லவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக 5 பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது புகார் கூறப்பட்ட நிலையில் சில பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் தாமாக முன்வந்து கண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் தலச்சேரி ‘போஸ்கோ’ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ராபின் வடக்கும்சேரிக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் உள்பட மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி இந்த தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கேரளாவில் பாதிரியார்களால் பெண்களும், சிறுமிகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.