தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு, கேபிள் ஆப்ரேட்டர்களைத் தவிர்த்து நேரடியாக மாதாந்திரக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் புதிய முறையை அமல்படுத்த மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது தொலைக்காட்சி சேனல்களை பொது மக்கள் கேபிள் டிவி மூலமாகவோ அல்லது டிடிஎச் எனப்படும் நேரடி வீட்டு இணைப்பு மூலமாகவோ பார்த்து வருகின்றனர்.
இந்த இரண்டு முறைகளிலும் தனியார் தொலைக்காட்சி பெரு நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்து வருகிறது.
எனினும் இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு சந்தை மிகப்பெரியதாக இருக்கும் நிலையில் இதில் உள்ள சுமார் 17 கோடி வாடிக்கையாளர்களிடம் நேரடியாக ஒவ்வொரு தனித்தனி சேனல்களுக்கும் மாதாந்திர
கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை அமல்படுத்தினால், இடையில் இருக்கும் கேபிள் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட தொடர்பு அமைப்பினருக்கு கொஞ்சநஞ்ச பங்கும் தர வேண்டியதில்லை, நேரடியாக மக்கள் கைகளில் இருந்து கார்ப்பரேட் தொலைகாட்சி பாக்கெட்டுகளுக்கு பெருமளவு லாபம் பார்க்க முடியும் என கணித்தனர்.
அதற்கேற்ப டிராய் அமைப்பு கடந்த 2017 மார்ச் மாதம் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிவித்தது. இதன்படி கேபிள் மூலமாக தனியார் தொலைக்காட்சி சேனல்களை வாடகை அடிப்படையில் பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள், இனிமேல் தங்களுக்கு விருப்பமான தனியார் சேனல்களை பார்க்க வேண்டுமென்றால் ஒவ்வொரு சேனலுக்கும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் விதிக்கும் மாதாந்திரக் கட்டணத்தை செலுத்தித்தான் பார்க்க முடியும்.
இந்த புதிய விதிமுறை கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அமலுக்கு வருவதாக டிராய் அறிவித்தது. எனினும் வாடிக்கையாளர்களை இந்த புதிய முறைக்கு மாற்றுவதற்காக காலவரம்பை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்தது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தனித்தனி சேனலுக்கு காசு கொடுத்துப் பார்க்கும் முறை அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் தோராயமாக 10 கோடி வீட்டு கேபிள் இணைப்புகளும், 6.7 கோடி டிடிஎச் இணைப்பு வீடுகளும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் நாளது தேதி வரை 65 சதவிகிதம் வீட்டுக் கேபிள் இணைப்புகளும், 35 சதவிகிதம் டிடிஎச் சந்தாதாரர்களும் மட்டுமே புதிய கட்டண முறைக்கு மாறி இருக்கின்றனர் என்று டிராய் தெரிவித்துள்ளது.
நாட்டில் முதல்முறையாக இந்த புதிய கட்டண முறை அமல்படுத்துவதால் சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பச் சேனல்களைத் தேர்வு செய்வதில் சிரமப்படுவ
தாகவும், அத்துடன் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களும் புதிய முறையை வாடிக்கையாளர்களிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாத நிலை உள்ளது.
அத்துடன் கட்டணச் சேனல்களை கேபிள் இணைப்புகளில் இருந்து நீக்கிவிடுவதால் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படும் நிலையில் புதிய முறையை அமல்படுத்த கால அவகாசம் தேவை என்று கோரிக்கை வந்துள்ளது.
தற்போது 200 ரூபாய் கொடுத்து சேனல்களை பார்க்கும் நிலையில், இம்முறையில் 350 ரூபாய் செலுத்த வேண்டி வரும் என்று கூறுகின்றனர்.