காடு, கழனி, விதைப்பு, விளைச்சல், அறுவடை, திருவிழா, மக்கள், விழிப்பு உணர்வு பயணம்னு அவங்களோட தெனப்படி வேலை, வாழ்க்கை இப்படித்தான் இருந்துச்சு. எனக்கு விவசாயம் பத்தி அவ்வளவா தெரியலைனாலும் அவங்களோட எந்த வேலைக்கும் நான் இடையூறா இருந்ததே கிடையாது.
அவங்களுக்குப் புடிச்சதை அவங்க செய்யுவாங்க. எனக்குப் புடிச்ச வேலையை நான் பார்த்துட்டு இருப்பேன். ஆனாலும், ரெண்டு பேருக்குமே பையனோட எதிர்காலத்து மேல ஒரே மாதிரியான கனவுதான் இருந்துச்சு. குடும்பத்துக்கும் சரி இந்த ஊருக்கும் சரி நல்லதே நினைக்கிற கணவர், அன்பான பையன்னு ரொம்பவே மகிழ்ச்சியோட போய்க்கிட்டு இருந்த எங்க வாழ்க்கை இந்நிலையில வந்து நிக்கும்னு நான் ஒருபோதும் நினைச்சதில்ல.
அவங்க ஆஸ்பத்திரியில இருக்கும்போதுகூட மீண்டு வந்திடுவாங்கன்னுதான் நம்பிக்கையா இருந்தேன். ஆனா, அந்த நம்பிக்கையும் வீணா போகிடுச்சு” மனதிலிருக்கும் துயரம் சித்ரா ஜெயராமனின் வார்த்தைகளில் நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
சித்ரா ஜெயராமன், திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த நெல் ஜெயராமனின் மனைவி. இயற்கை விவசாய ஆர்வலரான நெல் ஜெயராமன் நம்மாழ்வாரோடு இணைந்து 14 வருடங்களாக இயற்கை விவசாயம் குறித்து தமிழ்நாடு முழுவதிலுமுள்ள முக்கிய நகரங்களில் பிரசாரம் மேற்கொண்டவர்.
கடந்த 12 வருடங்களாகப் பாரம்பரிய அரிசி ரகங்களை அழிவிலிருந்து மீட்க பாரம்பரிய விதை நெல் திருவிழாவை நடத்தியவர். தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலுமுள்ள இயற்கை ஆர்வலர்களுக்கு நன்கு பரிட்சயமான நெல் ஜெயராமன் கடந்த 2017-ம் ஆண்டு புற்றுநோயால் அவதிப்பட்டு 2018 டிசம்பர் 6-ம் தேதி மரணத்தைத் தழுவினார்.
அவர் மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள சித்ரா ஜெயராமனைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம்.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் தன் கணவரின் இழப்பிலிருந்து அவர் முழுவதுமாக மீண்டு வரவில்லை.
“நான் என்ன பேசுறதுன்னே எனக்குத் தெரியலைங்க. அவங்களைச் சுத்தி இருக்கிற ஈ, எறும்புக்குக்கூடத் துரோகம் நினைக்க மாட்டாங்க. எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. டி, காபிகூட குடிக்க மாட்டாங்கன்னா பார்த்துக்கோங்க. சாப்பாட்டுல இந்த அரிசிதான் சேத்துக்கணும்னு சொல்லி அரிசியிலயும் நல்லதா பார்த்துதான் சமைக்கச் சொல்லுவாங்க. வெளியில எங்கேயாச்சும் போனாதான் தவிர்க்க முடியாம கடை சாப்பாடு சாப்பிடுவாங்க.
அப்படிப்பட்டவங்களுக்கு எப்படி புற்றுநோய் வந்ததுன்னு நினைச்சுதான் இப்போ வரை நான் அழுதுட்டு இருக்கிறேன். புற்றுநோய்னு தெரிஞ்சதுக்குப் பிறகுகூட அவங்க அண்ணன் பையன் அவங்ககிட்ட சொல்லவே இல்ல. என்கிட்டயும் ஆரம்பத்துல மறைச்சிட்டாங்க. அப்புறமா ட்ரீட்மென்ட்டுக்காக ஆஸ்பத்திரி போக இருந்தப்போதான் அவங்ககிட்ட சொல்லியிருக்காங்க. அப்பவும் என்கிட்ட ரொம்ப லேட்டாதான் சொன்னாங்க.
எங்க குடும்பத்துல யாருக்குமே இந்த நோய் வந்தது கிடையாது. சாப்பாட்டுலயும் சரி பழக்க வழக்கங்கள்லயும் சரி நல்ல கன்ட்ரோலா இருந்தவங்களுக்குப் போயி எப்படி இந்த நோய் வந்துச்சுன்னு நினைச்சு பதறினேன். கிராமத்துல கழனி, சனங்கன்னு சுத்திட்டு இருந்த மனுஷன் ஆஸ்பத்திரியில படுத்த படுக்கையா கிடந்ததைப் பாக்கவே கொடுமையா இருந்துச்சு.
அப்போகூட என்கிட்ட நான் மனசளவுல தைரியமாகத்தான் இருக்கேன். நீ வேணா பாரு. நான் நல்லபடியா மீண்டு வந்துடுவேன்னு சொன்னாங்க. நானும் அந்த நம்பிக்கையிலதான் இருந்தேன்.
ஆனா, இப்புடி என்னையும் என் மகனையும் தவிக்க விட்டுட்டுப் போவாங்கன்னு கனவுலகூட நினைக்கல” என்று அமைதியானவர் ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்,
“இப்போ வரை அவங்க இழப்புல இருந்து என்னால மீண்டு வரவே முடியலை. ஆனாலும், நான் சோகமா இருக்கிறதைப் பார்த்து பையனும் வருத்தப்படுறான்.
அவனுக்காகத்தான் துக்கத்தை மறைச்சிக்கிட்டு மெள்ள மெள்ள நான் வெளியில வர ஆரம்பிச்சிருக்கேன். இப்போ அவங்களோட அண்ணனும் அவரோட பையனும்தான் எங்களுக்கு உதவியா இருக்கிறாங்க. அவங்க ஆஸ்பத்திரியில இருக்கும்போதே வெளிநாட்டுல இருந்து கிளம்பி வந்துட்டாங்க.
தம்பிக்கு உடம்பு சரியில்லை. லீவு வேணும்னு கேட்டப்போ அங்கே கொடுக்காததால வேலையவே வேணாம்னு எழுதிக்கொடுத்துட்டு இங்க வந்துட்டாங்க. அந்த அளவுக்கு அவங்களுக்குத் தம்பி மேல பாசம். அவரோட பையன் ராஜுவும் அப்படித்தான். சித்தப்பா மேல நல்ல பாசமா இருப்பான். ஆஸ்பத்திரியில அவங்ககூட இருந்து கவனிச்சிக்கிட்டது ராஜுதான். இப்போ விவசாயத்தையும் அவங்கதான் கவனிச்சிக்குறாங்க.
நான் வழக்கம்போல அங்கன்வாடிக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். அங்க போயி குழந்தைகளோட இருக்கும்போது மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்குதுங்க” என்றவரிடம், ’அரசு கொடுத்த நிதியுதவி மற்றும் நடிகர்கள் அறிவித்திருந்த உதவித்தொகை எல்லாம் உங்களுக்குக் கிடைத்துவிட்டதா’ என்றோம்.
“ஆமாங்க, முதல்வர் கொடுக்கிறதா சொன்ன 5 லட்சம் நிதி உதவி கிடைச்சுடுச்சு. அது இப்போதைக்கு உதவியா இருக்கு. இன்னும் சில நடிகர்கள் பையனோட படிப்பு செலவுக்கு உதவுறதா சொல்லியிருக்காங்க. இப்போ சீனி ஆறாவதுதான் படிக்கிறான். அவன் மேற்படிப்பு போகும்போது அது சம்பந்தமா முடிவு எடுத்துக்கலாம்னு இருக்கிறேன்” என்றார்.
நெல் ஜெயராமனின் அண்ணன் மகன் ராஜு பேசும்போது, “சித்தப்பாவோட இழப்பை இப்போ வரை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. அவர் இருந்திருந்தா நிச்சயமா இந்த வருடமும் நெல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பார்.
கடந்த 12 வருடங்களா தொடர்ந்து நடந்துக்கிட்டு இருந்த திருவிழாவை சித்தப்பாவுக்கு அப்பறமும் நடத்தணும்னு நானும் அப்பாவும் ஆசைப்படுறோம். அதனால, வர்ற மே 24, 26 தேதிகள் பாரம்பரிய நெல் திருவிழாவை நடத்துறதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு.
ஒருவேளை தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது திருவிழா தள்ளிப்போக வாய்ப்பிருக்கு. மற்றபடி திருவிழா கண்டிப்பா நடக்கும். இந்த முறை 6,000 விவசாயிகளுக்குக் 2 கிலோ விதை கொடுக்க முடிவு செய்திருக்கோம். சீக்கிரமே திருவிழாவுக்கான அறிவிப்பை சொல்றோம். கண்டிப்பா வந்துடுங்க” என்றார்.