மனைவி போனில் பேசும்போதே வெடித்த குண்டு… கண்ணீர்க் கதைகள்!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பிரதீப் சிங் யாதவுக்கு சுப்ரியா என்ற 10 வயது மகளும் சோனா என்ற 2 வயது மகளும் உள்ளனர். இதில் சோனாவை பிரதீப்புக்கு மிகவும் பிடிக்குமாம். சோனாவும் அப்பா செல்லம்தான். குண்டுவெடிப்புக்கு முன்னர் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது கூட சோனா குறித்துதான் நீரஜ் 10 நிமிடங்கள் பேசியுள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் மனைவி, தாக்குதலுக்கு முன் அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது குண்டுவெடித்துள்ளது. இதனால், அந்தச் சத்தத்தைக் கேட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

இதேபோன்று உயிரிழந்த மேலும் பல வீரர்கள், தாக்குதலுக்கு முன்னர் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதையும், அண்மையில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பியதையும் உறவினர்கள் கண்ணீர் மல்கச் சொல்லி அழுவது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

போனில் பேசும்போதே குண்டு வெடிப்பு

கடந்த வியாழக்கிழமையன்று, புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அடில் அஹமத், தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடிப் பொருள்களுடன் வந்து அந்தப் பேருந்தின் மீது மோதினார். இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் 45 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர் பிரதீப் சிங் யாதவ். இவர், உத்தரப்பிரதேச மாநிலம், கன்னுஜ் மாவட்டத்திலுள்ள அஜன் சுக்‌ஷென்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் மனைவி நீரஜ் தேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தீவிரவாதியின் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உள்ளான மத்திய ரிசர்வ் காவல் படையினரின் வாகனத்தில் பிரதீப் சிங் யாதவும் இருந்துள்ளார். தாக்குதலுக்குச் சில நிமிடங்கள் முன்னர், பிரதீப் தன் மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். கான்பூரில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு வந்த நீரஜ் தேவியும், தன் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் குறித்து மிக ஆர்வமாகக் கணவரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போதுதான் குண்டுவெடித்துள்ளது. குண்டுவெடிப்பால் ஏற்பட்ட பலத்த சத்தத்தை நீரஜ் தேவியும் போனிலேயே கேட்டுள்ளார்.

“நான் என் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மறுமுனையில் காதையே செவிடாக்கும் வகையில் பலத்த சத்தம் கேட்டது. அதற்கு அடுத்த சில விநாடிகளில் மறுமுனையில் நிசப்தமாக இருந்தது. மீண்டும் என் கணவரின் செல்போனைத் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், தொடர்பு கிடைக்கவில்லை.

ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதாக என் உள்மனம் சொன்னது. என் கணவர் பத்திரமாக இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள அவரது செல்போனில் பேச மீண்டும் பலமுறை முயன்றேன். ஆனால், எல்லாமே முடிந்துவிட்டது. என் கணவர் உயிரிழந்த தகவலை, மத்திய ரிசர்வ் காவல் படையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து எனக்குத் தெரிவித்தார்கள்’’ எனக் குரல் உடைந்து அழுகிறார் நீரஜ் தேவி.

பிரதீப் சிங் யாதவ் – நீரஜ் தேவி தம்பதியருக்கு சுப்ரியா என்ற 10 வயது மகளும், சோனா என்ற 2 வயது மகளும் உள்ளனர். இதில் சோனாவை பிரதீப்புக்கு மிகவும் பிடிக்குமாம். சோனாவும் அப்பா செல்லம்தான். குண்டுவெடிப்புக்கு முன்னர் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தபோதுகூட சோனா குறித்துதான் நீரஜ் 10 நிமிடங்கள் பேசியுள்ளார்.

மகளுக்கு என்ன பதில் சொல்வேன்?’

இதை, தனக்கு ஆறுதல் கூற வரும் உறவினர்களிடம் கதறி அழுதபடியே சொல்லி, `என் மகள் அப்பா எங்கே’ எனக் கேட்டால் நான் என்ன சொல்லி அவளைச் சமாளிப்பேன் எனப் புலம்புகிறார் நீரஜ் தேவி. அவரை ஆற்றுப்படுத்த முடியாமல் குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

“பிரதீப்பிடம் நீரஜ் பேசிய சில நிமிடங்களிலேயே அவள் ஓவென்று கதறி அழுததைக் கேட்டோம். பிரதீப் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தி, சி.ஆர்.பி.எஃப் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சொன்ன தகவலைக் கேட்டு இதயமே நொறுங்கிப்போனதைப் போன்று அழுதாள் நீரஜ். எங்களுக்கும் துக்கம் தாளவில்லை. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம்.

இந்த மாத தொடக்கத்தில்தான் பிரதீப் கடைசியாக வீட்டுக்கு வந்து சென்றான். என் சகோதரன் நாட்டுக்காக தன்னுயிரை இழந்தது எங்களுக்குப் பெருமையான ஒன்றுதான் என்றாலும், உள்ளுக்குள் கடும் கோபமாகவும் இருக்கிறது.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். எங்களுக்கு இப்போது தேவை பதிலடிதான், வாக்குறுதி அல்ல’’ என்று கூறுகிறார் நீரஜ் யாதவின் உறவினர் சோனு.

ஏறக்குறைய இதே கதைதான் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இலிலாட்டா என்ற பெண்ணுக்கும் நேர்ந்துள்ளது. கட்டாக் மாவட்டம், ரத்தன்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் பெஹரா என்ற வீரரும், தாக்குதலுக்கு முன்னர் தன் மனைவி இலிலாட்டாவுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், கணவருடன் பேசிய ஓரிரு மணி நேரத்திலேயே இலிலாட்டாவுக்குப் போன் வந்துள்ளது. போனில் சொல்லப்பட்டத் தகவலைக் கேட்டு அழக்கூட தோன்றாமல் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

மனோஜ் குமாருக்கும் இலிலாட்டாவுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

குண்டுவெடிப்புத் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன் மனைவியுடன் பேசிய மனோஜ்குமார், “இன்று ஸ்ரீநகருக்குச் செல்ல வேண்டியதிருந்ததால், அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிட்டேன். ஆனால், சாலை சரியாக இல்லை என்பதால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீநகர் சென்றடைந்தவுடன் நான் உன்னிடம் மீண்டும் பேசுகிறேன்’’ எனச் சொன்னதாக இலிலாட்டா கண்ணீருடன் தன் கணவர் பேசிய வார்த்தைகளை நினைவுகூர்கிறார்.

மனோஜின் தாயார் சாபித்ரி பெஹரா, “என் மகன் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியன்று விடுமுறைக்கு வந்தான். எங்களைப் பார்த்ததில் அவனுக்கு மிகுந்த சந்தோஷம். ஜனவரி 16-ம் தேதி மகளின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினான். பின்னர் பிப்ரவரி 6-ம் தேதிதான் புறப்பட்டுச் சென்றான். ஒரு வாரத்திலேயே எங்களைத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்’’ எனக் கண்ணீருடன் கூறுகிறார்.

பெருமிதம்தான்… ஆனால் இழப்பு

ஒடிசா மாநிலம், ஜகத்சிங்புர் மாவட்டத்தில் உள்ள ஷிக்கார் கிராமத்தைச் சேர்ந்த பர்ஷானா ஷாகு என்ற வீரரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். சி.ஆர்.பி.எஃப் 61 வது பட்டாலியனில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய பர்ஷானா, கடந்த நவம்பர் மாதம்தான் வீட்டுக்கு வந்து மனைவியைப் பார்த்துச் சென்றுள்ளார். அவரின் மனைவி தன் கணவர் உயிரிழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

மகள் சோனி, “என் தந்தை இந்த நாட்டுக்காகத் தன் உயிரிழந்துள்ளார். அவரை நினைத்து நானும் என் குடும்பத்தினரும் பெருமிதம் கொள்கிறோம். இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவு அவருக்கு எப்போதுமே உண்டு. ஒரு மகளாக என் தந்தையின் இழப்பு எனக்கு ஈடு செய்ய முடியாததுதான்’’ என்று கூறி அழுகிறார்.

இவர்களின் கண்ணீருக்கு எத்தகைய பதிலடியைக் கொடுக்கப்போகிறது அரசு?