ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடிந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசு தரப்பிலும் கூறிவருகின்றனர்.
பிரதமர் மோடி பதிலடி கொடுக்க ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக, இன்று காலை புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்திய வீரர்களின் தாக்குதலின் போது பயங்கரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தினர், இதில் இந்திய ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.