விமான விபத்தில் பலியான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் சாலாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு வெளியே அவருடைய வளர்ப்பு நாய் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலா, ஜனவரி 21ம் தேதி பிரான்ஸ் நாட்டின் நன்டேஸ் பகுதியில் இருந்து வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, திடீரென விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்த கடற்படையினர் 15 நாட்களுக்கு பிறகு அவருடைய உடலை கண்டுபிடித்தனர்.
அவரது இறுதி ஊர்வலம் நிகழ்வானது நேற்று அவருடைய சொந்த ஊரான Progreso-வில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவருடைய உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர், மக்கள் அனைவருமே அங்கிருந்து கிளம்பி விட்டனர்.
ஆனால் அவருடைய செல்லப்பிராணியாக ‘நாலா’ என்கிற நாய் அந்த இடத்தை விட்டு அகலாமல், அங்கேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்துள்ளது. இந்த புகைப்படமானது சாலாவின் சகோதரியால் இணையத்தில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து வைரலாக பரவி வருகிறது.