காதலித்து ரகசியம் திருமணம் செய்த சப் இன்ஸ்பெக்டர்!

இந்தியாவில் காதலித்து, ரகசியமாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, இப்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகத் தர்மபுரி சப்-இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சத்யா. இவர் தர்மபுரி ஸ்பெஷல் டீமில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் சீனிவாசன் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நானும் சீனிவாசனும் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அதன் பின் அடுத்த ஆண்டே இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தோம்.

இந்நிலையில் அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு உமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் இது குறித்து என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதன் பின் பெற்றோர் அவரை அழைத்து விசாரித்த போது, அது உண்மை தான், இவளுக்கு குழந்தை இல்லை என்பதால் திருமணம் செய்து கொள்கிறேன்.

ஆனால் இவளை எப்போதும் கைவிடமாட்டேன், கடைசி வரை பார்த்து கொள்வேன் என்று கூறினார்.

என்னை தொடர்ந்து கவனித்து வந்த அவரிடம், கடந்த ஆண்டு நான் கர்ப்பமாக இருப்பதை அவரிடம் கூறினேன்.

அதன் பின் அவர் முழுவதுமாகத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார். தொலைபேசியில் அழைத்தாலும் என் அழைப்பை ப்ளாக் செய்து வைத்துவிட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் என்னைத் தன்னந்தனியாகத் தவிக்க விட்டதால், என்னால் வீட்டு வாடகை கூடச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சீனிவாசனுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும், காவல்துறையில் சீனிவாசனுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.

இது குறித்து சீனிவாசனிடம் கேட்ட போது, சத்யா என் அத்தை மகள், எனக்கு முன்பே திருமணம் முடிந்து குழந்தை உள்ளது.

அவளது நடவடிக்கையின் சரியில்லை. என் தாயிடம் எனது காவலர் அடையாள அட்டையை ஏமாற்றிப் பெற்றுச் சென்றுள்ளார். மற்ற ஆவணங்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டது. அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.