யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (19) நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த டான் தொலைக்காட்சியின் செய்தியாளர் ந.குகராஜனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, இன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
நேற்று (19) இரவு கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
அவர் நாளை புதன்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொக்குவிலில் நேற்று நடத்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தியாளர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, அவரது பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி செயற்பட்டதுடன், முகத்தில் தாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அத்துடன் அவரிடம் பொலிஸ் முறைப்பாடும் பெறப்பட்டது.
சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ தொடர்பில் உடனடி விசாரணைக்கு யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 2இற்கு அறிவுறுத்தல் வழங்கினார்
அதனையடுத்தே கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.