கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு முன்னெடுத்து நடத்திய தீவிரவாதியான ரஷித் என்ற கம்ரன் காஷ்மீரில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த நிலையில் தாக்குதலுக்கு முன்பே கம்ரன் தலைமையில் 21 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்றதாக உளவுத்துறை தற்போது கண்டுபிடித்துள்ளது.
அதில் அதில் ஒரு பிரிவினர் குஜராத் மாநிலத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கூட்டத்தின் தலைவன் கொல்லப்பட்ட நிலையில் மற்ற இடங்களில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சர்தார் சரோவர் அணைக்கட்டு, சோம நாத் ஆலயம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.