கோபிசெட்டிபாளையம் தாலுகா, பொலவக்காளிபாளையம் கிராமம், பெரியார்நகரில் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும்படி பாறைகளுக்கு வெடி வைத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பொலவக்காளிபாளையம் கிராமம், பெரியார்நகரில் சுமார் 220க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள்.
பிப்ரவரி 17 ஆம் தேதியன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் பெரியார்நகர் ஊருக்கு மேற்குப்புறம் சதீஷ், கைலாஷ் ஆகியோர் கரடு முரடான இடத்தை சுத்தம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குடியிருப்பிற்கு அருகிலேயே பாறைகளை தகர்ப்பதற்காக வெடிவைத்துள்ளனர். பயங்கர சத்தத்துடன் வெடித்ததோடு வெடித்து சிதறிய பெரிய பெரியகற்கள் சுமார் 40 வீடுகளில் மீது விழுந்ததில் வீட்டின் கூறை ஓடுகள் சேதமடைந்தும், வீட்டிற்குள் வைத்திருந்த டிவி, பிரிட்ஜ், வீட்டு உபயோக பொருள்களை சேதமாகியுள்ளது.
மேலும், ராமாள் என்பவர் மீது கல் விழுந்ததில் அவர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிலருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் ஏற்கனவே சதீஷ், கைலாஷ் ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்கள் வெடி வைக்கவேண்டாம் என்று கேட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள்,எங்களுக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் அப்படித்தான் வைப்போம் உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
எனவே மனித உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அப்பகுதியில் மேலும், பாறைகளுக்கு வெடி வைக்க கூடாது. வெடி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர்.