பிரித்தானியா அரசு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானியா அரசு மன்னிக்கு கேட்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரசில் இருக்கும் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால் இதற்கு பிரித்தானியா அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக எழுந்து வருகிறது.

இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானியா அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என பஞ்சாப் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை விவகார அமைச்சர் பிரஹம் மொகிந்திரா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். கட்சிப் பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் திகதி அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அப்பாவி போராட்டக்கரார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ரெளலட் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த உள்ளூர் மக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்தது வெட்கக் கேடானது.

இத்துயர சம்பவத்தின் நூற்றாண்டு நினைவை நாங்கள் அனுசரிக்கும் வேளையில், இந்திய மக்களிடம் பிரித்தானியா அரசு முறைப்படி மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.