காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த 14ம் தேதி இந்திய துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 44 பேர் பலியானர்.
மேலும் பல வீரர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதற்கு கடுமையான கண்டங்கள் எழுந்து வருகிறது.
இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும் கலாச்சார நிகழ்ச்சிகள், கிரிக்கெட் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தானை ஒதுக்கும் நடைவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உருவாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் நதியின் 80 சதவீத நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானுக்குச் செல்லும் 3 நதிகளின் நீரை தடுத்து அதை யமுனை ஆற்றில் இணைப்பதால் யமுனை ஆற்றின் நீர்வளம் அதிகரிக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.