நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் பிஸியாக உள்ள நிலையில், அமமுகவோ, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால்,கூட்டணி அமைப்பது தொடர்பாக சில முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறி வரும் தினகரன், 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் 28 ஆம் தேதி அனைத்தையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசியல் களத்தில் அவரின் திட்டம் என்னவாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் யூகிக்கும் அதே வேளையில், தினகரன் மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்கி தொடர்ந்து வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆதரவை அமமுக கேட்டு,முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தலைமையிலான நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்துக்கு சென்று பேசியுள்ளார்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நீண்டகாலமாக எங்களோடு நட்பில் இருந்து வருகின்றனர்; கடந்த ஆர்.கே.நகர் இடை தேர்தலிலும் தினகரனை ஆதரித்து வெற்றிக்கு உதவினார்கள்; எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்ககோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிர்வாகிகளைச் சந்தித்ததாக வெற்றிவேல் கூறியுள்ளார்.
வெற்றிவேல் தலைமையிலான குழுவினர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்திக், துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் விசாரித்த போது, தினகரன் தனது அணிக்கு பலம் சேர்க்கும் வகையில், ஹைதாராபாத் எம்.பி உவைஸியின் மஜ்லீஸ் கட்சி, எஸ்.டி.பி.ஐ.கட்சி, தமிம் அன்சாரி உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகளுடன் கைகோர்த்துள்ளார் என கூறப்படுகிறது.