மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட முதல்வர்!

கணைய அழற்சி நோயால் கோவா முதல்வரான மனோகர் பாரிக்கர் அவதிப்பட்டு வருகிறார். இந்த கணைய அழற்சிக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற முதல்வர் மனோகர் பாரிக்கர், பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில், அவர் மீண்டும் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனோகர் பாரிக்கரின் உடல்நிலை தற்பொழுது சீராக உள்ளது. குறைந்தது 48 மணிநேரம் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூத்த அமைச்சர் விஜய் சர்தேசாய், “பாரிக்கரின் உடல்நிலை மோசமடைந்து விட்டதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார். மேலும், மருத்துவர்கள், ‘ அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இனி அச்சப்பட வேண்டாம்’ என கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மருத்துவமனை சென்று மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்த கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே, ” மனோகர் பாரிக்கர் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ” என கூறியுள்ளார்.

முதல்வர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.