ஹைதராபாத் புறநகர் பகுதியான ராஜேந்திரன் நகர் சிவராம் பள்ளி காலனியில் சித்திக் பார்ம் என்ற பெயரிலான ஏ டூ இசட் பொழுது போக்கு பூங்கா உள்ளது. நேற்று மாலை ஆறு மணி அளவில் பூங்காவை மூடிவிட்டு அனைவரும் சென்று விட்ட நிலையில், சிவராம் பள்ளியை சேர்ந்த சிறுவன் முகமது காஜா என்பவர் தன் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ஆட்டோவில் அங்கு சென்றுள்ளார். மேலும் பூங்காவில் யாரும் இல்லாத நிலையில் உள்ளே நுழைந்த 4 பேரும் அங்கு உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி நீச்சல் பயில முயன்றனர்.
அப்போது, சிறுவர் சித்திக் சற்று நேரம் நீச்சல் குளத்தின் சுவரைப் பிடித்துக்கொண்டு நீச்சல் பழகினான். பின்னர் நீந்திக்கொண்டே சுமார் 20 அடி தூரம் நீச்சல் குளத்துக்குள் சென்ற சிறுவன் முகமது காஜா, எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக மரணம் அடைந்தான். இந்நிலையில் நான்கு பேர் பொழுதுபோக்கு பூங்காவுக்கு வந்தது, அவர்கள் நீச்சல் பழகியது, சிறுவன் சித்திக் நீச்சல் குளத்தில் மூழ்கி மரணம் அடைந்தது ஆகிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வரை சிறுவன் வீடு திரும்பாத நிலையில், அவனுடைய பெற்றோர்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் தேடியுள்ளனர். அப்போது ஏ டூ இசட் பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் முகமது காஜா மூழ்கி மரணம் அடைந்தது தெரியவந்தது. நீச்சல் பயில வரும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க அங்கு இல்லாத காரணத்தால் தங்களது மகன் குளத்தில் மூழ்கி மரணம் அடைந்தான் என்று குற்றம்சாட்டி ராஜேந்திரன் நகர் காவல் நிலையத்தில் அவனுடைய பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து எ டு ஜெட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற போலீசார் முகமது காஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆதாரமாகக் கொண்டு செய்துள்ள ராஜேந்திரன் நகர் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். பொழுதுபோக்கு பூங்கா உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார்.