உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? என்ற கேள்விக்கு, தேசத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அணியின் கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
2019ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அட்டவணையின்படி ஜூன் 16ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கடந்த 14 ந் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து, உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன், இந்திய அணி விளையாடக் கூடாது என எதிர்ப்புகள் எழத் தொடங்கின. மேலும் உலககோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியை தடை செய்யக் கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு, பிசிசிஐ கடிதம் எழுதியது. ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ‘புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். தேசம் என்ன செய்ய விரும்புகிறதோ, பிசிசிஐ என்ன முடிவு செய்கிறதோ, அதன்படி நடப்போம். அரசும், பிசிசிஐ-யும் என்ன முடிவு செய்தாலும் ஏற்றுக் கொள்வோம்” என கூறியுள்ளார்.