பரிதாபமாக உயிரிழந்த நான்கு வயது சிறுமி!

திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி கிண்ணியா – காக்காமுனை – பாடசாலை வீதியை சேர்ந்த ரிச்சப் முகம்மட் நியாஸ் என்பவரின் மகள் சைனுல் சமா (04 வயது) எனவும் தெரியவருகின்றது.

கடந்த வியாழக்கிழமை இரவு காய்ச்சல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட வைத்திய நிபுணர் மரணம் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மரண விசாரணை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.