மகளின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை பூஜா பேடி, தன்னுடைய காதலனை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தற்போது 49 வயதை அடைந்திருக்கும் பாலிவுட் நட்சத்திரமான பூஜா பேடி, தன்னுடைய நடிப்பிற்கு முழுக்கு போட்ட பின், ஃபர்ஹான் பர்னிச்சர் வல்லா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 21 வயதில் ஆலியா என்கிற மகளும், உமர் என்கிற மகனும் இருக்கின்றனர். கடந்த 2003-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பூஜா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார்.

16 வருடங்கள் தனியாக தன்னுடைய குழந்தைகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்த பூஜா, சமீபத்தில் பள்ளிப்பருவ நண்பரான மேனக் கான்ட்ராக்டரின் புகைப்படத்திற்கு கீழே கருத்து பதிவிட்டதன் மூலம் மீண்டும் அவர்களுக்கு இடையில் பழக்கம் உண்டானது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. ஒரு முறை வெப்பக் காற்றினால் இயங்கும் பலூனில் பூஜாவை அழைத்து கொண்டு சென்ற மேனக், திடீரென ஒரு வைர மோதிரத்தை காட்டி காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதனை பார்த்ததும் கண்களில் நீர் வழிய அவருடைய காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூஜா பேடி, மேனக் என்னைவிட மூன்று வயது பெரியவர். ஒரே பள்ளியில் படித்திருந்தாலும், நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை.

கடந்த ஆண்டு அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு நான் கருத்து பதிவிட்டதாலே எங்களுக்கும் மீண்டும் நட்பு உருவாகியது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு தன்னுடைய பிள்ளைகள் ஒப்புக்கொண்டதால், இந்த ஆண்டில் தன்னுடைய மகள் படப்பிடிப்பு மற்றும் படிப்பை முடித்ததும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.