காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி துணை ராணுவ படை வீரர்கள் வந்த பேருந்துகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 41 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 துணை ராணுவ படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நாட்டிற்காக தங்களது உயிரையே தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நிதி உதவி செய்து வருகின்றனர். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் நிதி உதவி அளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குள் செல்லும் ராவி, சட்லெட்ஜ், பியாஸ் ஆகிய நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் இறங்கி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி உள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் பச்சை மிளகாய் கிலோ ரூ. 160-க்கும், சிவப்பு மிளகாய் ரூ. 300-க்கும், இஞ்சி ரூ. 150-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும், வெங்காயம் ரூ. 90-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 110-க்கும் விற்கப்படுகிறது.