`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்!’‍- கதறிய மாணவியின் அப்பா

`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்!’‍- கதறிய மாணவியின் அப்பா

`என் பொண்ணு காணாமல் போனதும் சங்கரய்யா மீதுதான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீஸாரும் அவரிடம் விசாரித்தனர்.

ஆனால், அவர் தெரியாதுன்னு சொல்லிட்டார். வீட்டுக்கு வந்த சங்கரய்யாவிடம் என் பொண்ணு எங்கே என்று சொல்லு, நீ, ஆசைப்பட்ட மாதிரியே உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்’ என்று கதறினேன் என மாணவியின் அப்பா நம்மிடம் தெரிவித்தார்.

மாணவியின் எலும்புகூடு

திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. இவரின் மகள் உஷா (பெயர் மாற்றம்). அந்தப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார்.

இவரின் வீட்டுக்கும் பள்ளிக்கும் 5 கிலோ மீட்டர் தூரம். இதனால் கீச்சளம் கரும்புத் தோட்டம் வழியாக குறுக்குப்பாதையில் பள்ளிக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 7.9.2018-ல் பள்ளிக்குச் சென்ற உஷா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மாணவியின் எலும்புகூடு

இந்த நிலையில், கடந்த 11.2.2019-ல் கீச்சளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் மனித எலும்புக்கூடு கிடப்பதாகவும், அதன் அருகே மாணவியின் பள்ளிச் சீருடையிருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனால் சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.பொன்னி, டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீஸார் வந்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் அது, மாயமான உஷாவின் எலும்புக்கூடு என்பதைக் கண்டறிந்தனர்.

மாணவியைக் கொலை செய்தவர்கள் யாரென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்த சங்கரய்யா என்ற கல்லூரி மாணவர், பண்ணை வீட்டின் உரிமையாளர் நாதமுனி, ஜெகதீஷ்பாபு, அவரின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழும் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

என்ன நடந்தது என்று மாணவியின் அப்பா சுப்பிரமணியிடம் பேசினோம்.

“என்னுடைய மகள் உஷா, ஸ்கூலில் நல்ல படிப்பாள். டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டாள்.

எங்கள் ஊரைச் சேர்ந்தவர்தான் சங்கரய்யா. காலேஜ் படித்தார். சில மாதங்களுக்கு முன் உஷாவின் கையைப் பிடித்து இழுத்துள்ளார் சங்கரய்யா. அதை என்னிடம் கூறியதும் சங்கரய்யாவை கண்டித்தேன். அதன்பிறகும் அவர் திருந்தவில்லை.

இந்தச்சமயத்தில்தான் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி ஸ்கூலுக்கு உஷா கிளம்பிச் சென்றாள். வழக்கமாக அவள் கீச்சளம் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு பால் கொடுத்துவிட்டு ஸ்கூலுக்குச் செல்வாள்.

அதுபோலதான் அன்றும் அவர் புறப்பட்டு சென்றாள். அதன்பிறகு அவள் வீடு திரும்பவில்லை. ஸ்கூலில் விசாரித்தால் அங்கேயும் வரவில்லை என்று சொன்னார்கள்.

உடனே எல்லா இடங்களிலும் தேடினோம். ஆனால், எங்கேயும் கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அப்போது போலீஸார் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டார்கள். உடனே சங்கரய்யா மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினேன்.

சங்கரய்யாவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், நான் உஷாவை பார்க்கவே இல்லை என சத்தியம் செய்தார். இதனால் அவரை விட்டுவிட்டனர். சங்கரய்யாவுக்கு ஆதரவாக ஜெகதீஷ் என்பவர் வந்திருந்தார்.

மாணவியின் சீருடை

இதையடுத்து சங்கரய்யா வீட்டுக்கு நான் சென்றேன். என்னுடைய மகள் குறித்து அவரிடம் விசாரித்தேன். அப்போது அவர் என்னிடமும் தெரியாது என்று கூறினார்.

உடனே நான், என் பொண்ணு எங்கே சங்கரய்யா என்று கேட்டதோடு, உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன் என சொன்னேன். அதற்கு அவர் எனக்குத் தெரியவே தெரியாது என்று கூறினார்.

உடனே அவருடைய அப்பாவும் நிச்சயம் உஷா வந்துவிடுவாள் என்று எனக்கு ஆறுதல் கூறினர். இதனால் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

இந்தச்சமயத்தில்தான் உஷா, பெங்களூருவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே நான் மற்றும் போலீஸார் அங்கு சென்றோம். நாங்கள் தேடிச் சென்றவர்கள் அங்கு இருந்தனர். அவர்களிடம் உஷா குறித்து கேட்டோம்.

அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர். செல்போனை எதற்காக சுவிட்ச் ஆப் செய்து வைத்தீர்கள் என்று போலீஸார் அவர்களிடம் கேட்டதற்கு தண்ணீரில் விழுந்துவிட்டது என்று கூறினர்.

இதையடுத்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். உஷாவை பல இடங்களில் தேடிவந்தோம். அடிக்கடி சங்கரய்யாவிடமும் விசாரித்தேன்.

மாணவி வழக்கில் கைதானவர்கள்

இந்தச் சமயத்தில்தான் கீச்சளம் கரும்புத் தோட்டத்தின் அருகில் உள்ள ஓடையில் எலும்புக் கூடு கிடப்பதாகவும், அருகில் பள்ளிச் சீருடை, செருப்பு, தங்கக் கம்மல், மோதிரம் ஆகியவை கிடப்பதாகவும் தகவல் கிடைத்தது.

அப்போது மாலை 6 மணி இருக்கும். உடனே ஊரில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு வந்தனர். பள்ளிச் சீருடை, செருப்பு, கம்மல், மோதிரம், தலைமுடி, வளையல், வெள்ளை நிற ரிப்பன் ஆகியவற்றைப் பார்த்து அது என் மகள் எனக் கூறினேன்.

போலீஸாரும் அங்கு வந்தனர். எலும்புக்கூடு கிடந்த இடத்தின் அருகே யாரும் செல்லவேண்டாம். டாக்டர் வரட்டும் என போலீஸார் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

பாதுகாப்புக்கு 3 போலீஸார் மட்டும் அங்கு இருந்தனர். நானும், என்னுடைய ஊரைச் சேர்ந்த பத்துபேரும் விடிய விடிய அங்கே இருந்தோம். மறுநாள் போலீஸாரும் டாக்டரும் வந்தனர். இதையடுத்து, என்னுடைய மகளின் எலும்புக்கூட்டை எடுத்துச் சென்றுவிட்டனர்.

அப்போதுகூட சங்கரய்யாவும் ஜெகதீஸ்ஷும் அங்கு வந்திருந்தனர். இதையடுத்து, மீண்டும் சங்கரய்யாவிடம் விசாரித்தபோதுதான் அவர் உண்மையைச் சொன்னார்.

சம்பவத்தன்று ஸ்கூலுக்குச் சென்ற உஷாவை வழிமறித்த சங்கரய்யா அவளை நாதமுனியின் மாந்தோப்பு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு 5,000 ரூபாய்க்கு உஷாவை வித்துவிட்டு சென்றுள்ளார். நாதமுனி மற்றும் அவரின் கூட்டாளிகள் எல்லோரும் சேர்ந்து என்னுடைய மகளை நாசம் பண்ணிட்டானுங்க. அவர்களுக்கு நல்ல சாவே வராது.

என்னுடைய ஒரே மகளை படிக்க வைச்சு, நல்ல நிலைமைக்கு கொண்டு வரணுமுன்னு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு உழைத்தேன்.

ஆனால், இப்படி நடந்து போய்விட்டது. அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். என் பொண்ணு காணாமல் போனவுடன் சங்கரய்யாவிடம் கேட்டபோதே அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் உயிரோடு அவளைக் காப்பாத்திருப்பேன்” என்றார் கண்ணீர்மல்க.