ஜெயலலிதா பிறந்த நாளின்போது, அவருடைய சமாதியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் நேற்று (24 ஆம் திகதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அ.தி.முகவினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சென்னையிலுள்ள அவரது சமாதியில், அரசியல் கட்சித் தலைவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
துணை முதல்வர் ஓபிஎஸ் மகன், ஜெயலலிதா நினைவாக அவரது சமாதியில் 6 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிலையில், பட்டுச் சேலை – பட்டு வேஷ்டி, கழுத்தில் மாலை அணிந்து உறவினர் புடைசூழ ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த புதுமணத் தம்பதி ஒன்று, சமாதியில் விழுந்து வணங்கிவிட்டு, அதன்பின்னர் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து விசாரித்தபோது மணமகன் கூறியதாவது, “சென்னை 63வது வட்ட அ.தி.மு.க பொருளாளரின் மகன் நான். எனது பெயர் ஜெயதேவன்.
1990ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ஜெயலலிதாவிடம், குழந்தையாக இருந்த என்னைக் கொடுத்து பெயர் வைக்கும்படி எனது தந்தை கேட்டுக்கொண்டார். இதையடுத்து எனக்கு, ‘ஜெயதேவன்’ என்று ஜெயலலிதா பெயர் வைத்தார்.
எங்கள் குடும்பத்தினர் விரும்பும் தலைவி ஜெயலலிதாவின் முன்னிலையில்தான் எனது திருமணத்தை நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆனால், அந்த வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எனவே எனது பெற்றோரின் ஆசியுடன், அவருடைய சமாதியில் வைத்து திருமணம் செய்துகொண்டேன்.
இன்று அவருடைய பிறந்த நாள்; அவரே நேரில் என்னை வாழ்த்தியது போல் உள்ளது” என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், தொண்டர்கள் அவரை இன்றும் நினைவு கூர்ந்து தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளை அவரது நினைவிடத்தில் நடத்துவது அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.