காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில், கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வந்த சிலர் குழப்பம் விளைவித்தனர்.
இன்றைய போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில், கறுப்புச் சட்டை அணிந்து வந்த அரசியல் கட்சியினர் சிலர் குழப்பங்களில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் முன்னே சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பதாதையை மறைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதுடன், பேரணியின் போதும், இடையிட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.
திடீரென பேரணியில் சென்றவர்களை வீதியில் அமர உத்தரவிட்டு, ஒழுங்கமைப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், ஒலிபெருக்கி வாகனத்தின் மூலம் ஒழுங்கமைப்பு மேற்கொண்ட ஒருவரையும் அவர்கள் தாக்கினர்.
இவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளை படம்பிடித்த ஊடகவியலாளர்களையும் கறுப்புச்சட்டை அணிந்தவர்கள் தாக்க முற்பட்டனர்.
காணாமல் போனோர் பணியகம் வேண்டாம் என்று முழக்கம் எழுப்பிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை தலைவர் ஒருவர் தடுக்க முயன்றதாலும் குழப்பம் ஏற்பட்டது.
குழப்பம் விளைவித்தவர்களில் தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களும் அடங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்களின் நடவடிக்கைகளால், போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதகுருமார், பொதுமக்கள், மற்றும் ஊடகவியலாளர்களும், அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.