கைவரிசை காட்டிய இந்திய கும்பல்: அம்பலமான கணினி மோசடி!

பிரித்தானிய வாடிக்கையாளர்களுக்கு உதவுவதாக கூறி பல ஆயிரக்கணக்கான பவுண்டுகளை கொள்ளையிட்ட கும்பலில் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தென் ஷீல்ட்ஸ் பகுதியில் குடியிருந்து வந்தவர் பால்ஜீந்தர் சிங். இவருக்கே தற்போது பண மோசடி விவகாரத்தில் 28 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பால்ஜீந்தர் சிங் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து இயங்கும் ஒரு மோசடி கும்பலுக்கு உதவியுள்ளார்.

பிரித்தானியாவில் கணினி தொடர்பில் உதவி கேட்கும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை இந்த கும்பல் சுமார் 400,000 பவுண்டுகள் வரை பிரித்தானியர்களிடம் இருந்து கொள்ளையிட்டுள்ளது.

Devine Technical Services என்பது பிரித்தானியாவில் செயல்பட்டு வந்த பால்ஜீந்தர் சிங் என்பவரின் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்திற்கு உதவி கேட்டு அழைப்பு விடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெல்லியில் இருந்து கும்பல் ஒன்று தொலைநிலை அணுகல் மூலம் சேவை அளித்து வருகிறது.

உதவி கேட்கும் வாடிக்கையாளர்களின் கணினியுடன் remote access மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் இந்த கும்பல்,

வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் தீங்கிழைக்கும் மென்பொருளை அவர்களது கணினியில் நிறுவுகின்றனர்.

பின்னர் அவர்களை அறியாமல், அதிக பணம் மோசடி செய்கின்றனர். இந்த கும்பலிடம் சிக்கிய டாமியன் மோரிசன் என்பவரே பொலிசாரின் பார்வைக்கு இந்த மோசடியை கொண்டு சென்றுள்ளார்.

இந்த மோசடிக்கு துணை நின்ற பால்ஜீந்தர் சிங் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், பிரித்தானிய வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றிய தொகையை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாடிக்கையாளர் ஒருவரிடம் 70 பவுண்டுகள் கட்டணமாக செலுத்த கோரியுள்ள இந்த கும்பல், பின்னர் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 2,700 பவுண்டுகள் கொள்ளையிட்டுள்ளது.

இவர்களிடம் சிக்கிய பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கணினி தொடர்பில் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.