புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனம் இவருடையதா??

இந்தியாவில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது, காஷ்மீரில் பிஜிபெஹரா பகுதியை சேர்ந்த சஜ்ஜத் பட் என்பவருடைய மாருதி கார் என விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த நபர் தற்போது மாயமான நிலையில், அவரது புகைப்படத்தை விசாரணை அணிகாரிகள் வெளியிட்டு உதவி கோரியுள்ளனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் துணை ராணுவத்தினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கடந்த பிப்ரவரி 14 ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது, அனந்த்நாக் மாவட்டம் பிஜிபெஹரா பகுதியை சேர்ந்த சஜ்ஜத் பட் என்பவருடைய மாருதி கார் என விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் சாசிஸ் எண்- MA3ERLF1SOO183735, எஞ்சின் எண்: G12BN164140. இந்த கார் 7 முறை கைமாற்றப்பட்டுள்ளது. தற்போது சஜ்ஜத் பட்டின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினரிடன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடிய விரைவில் அவர் பிடிக்கப்படுவார் என நம்பப் படுகிறது.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியப் பாதுகாப்புப் படையின்மீது பாக்கிஸ்தான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

2015 ஜூலை மாதத்தில் துப்பாக்கி ஏந்திய மூவர் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தைத் தாக்கினர்.

2016 ஜனவரியில் துப்பாக்கியுடன் பதான்கோட் வான் படை நிலையத்தில் தாக்குதல் நடந்தது.

2016 பிப்ரவரி மற்றும் ஜூன் காலகட்டத்தில் எட்டு இராணுவத்தினர் பொம்பொரி தாக்குதலில் உயிரிழந்தனர். 2016 செப்டம்பரில் இந்திய இராணுவப் பட்டாளத் தலைமையகத்தில் நிகழ்ந்த யூரி தாக்குதலில் 19 படையினர் உயிரிழந்தனர்.

2017 டிசம்பர் 31 இல் லெத்திபோரா கமொண்டோ பயிற்சி நிலையத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர்.