திரைப்படத் தயாரிப்பாளரால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நடிகை சந்தியாவின் முழு உடலையும் மீட்டுத்தர வேண்டும் என சந்தியாவின் தாயார் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை சந்தியாவின் தாயார் பிரசன்ன குமாரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “எனக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் என மூன்று பிள்ளைகள் உண்டு. மூத்த மகள் சந்தியாவை தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரான பாலகிருஷ்ணனுக்கு 13.11.2000 அன்று திருமணம் செய்துகொடுத்தோம்.
சந்தியாவும் பாலகிருஷ்ணனும் தூத்துக்குடியில் வசித்துவந்தனர். அர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சென்னையில் சினிமா தயாரிப்பாளராகப் பணிசெய்த பாலகிருஷ்ணன் அடிக்கடி தூத்துக்குடி வந்துசெல்வார்.
வரும்போதெல்லாம் கணவர் மனைவிக்கிடையே தகராறு நடக்கும். இந்தத் தகராற்றுக்கு பாலகிருஷ்ணனின் தாய் சரோஜினியும் தம்பி சீனிவாசன், சீனிவாசனின் மனைவியும்தான் காரணம்.
கடந்த ஓர் ஆண்டாகத் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவந்ததாக என் மகள் என்னிடம் கூறிவந்தாள்.
குடும்பம் என்றால் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும் என்று அவளை சமாதானப்படுத்தினோம்.
அவள் அழகாக இருப்பதாகவும், இந்த அழகு உனக்குத் தேவை இல்லை எனக் கூறி 8 முறை மொட்டையடித்து, அவள் கையிலும் மார்பிலும் பச்சைகுத்தியும் துன்புறுத்தி வந்தார்கள்.
ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூத்துக்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பிறகு, எங்கள் வீட்டில் வாழ்ந்த சந்தியாவை அவரின் கணவர் தந்திரமாகச் சென்னைக்கு அழைத்துச் சென்றார். சென்னைக்குச் சென்ற சந்தியா கடந்த டிசம்பர் 25-ம் திகதி என்னிடம் வந்து 75,000 ரூபாய் வாங்கிக்கொண்டு அன்றே திரும்பிச் சென்றுவிட்டாள்.
அதன் பிறகு, ஒருமுறை மட்டும்தான் சந்தியா என்னிடம் போனில் பேசினாள். நான் போன்செய்தால் பாலகிருஷ்ணன் போனை எடுத்துப் பேசுவார்.
சந்தியா எங்கே எனக்கேட்டால் அவள் வெளிநாடு செல்ல தயாராகிவருகிறாள் எனக் கூறுவார்.
திடீரென ஒருநாள் சென்னை பொலிஸார் என்னைத் தொடர்புகொண்டு என் மகளின் உடலில் பச்சை குத்தியிருந்த அடையாளத்தைக் கூறி விசாரித்தனர்.
பின்னர் என்னை அடையாளம் காட்டும்படி கூறினர். ஒரு கை, இரண்டு கால்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் முக்கிய உறுப்புகளான தலை, சிறுநீரகம், இதயம், ஒரு கை போன்றவை இதுவரை கிடைக்கவில்லை. சந்தியாவின் மீதி உடல் பாகங்களை மீட்டு, மொத்த உடலையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
எனது மகள் சந்தியாவின் குழந்தைகள் பாலகிருஷ்ணனின் தம்பி சீனிவாசனிடம் உள்ளனர், அந்த குழந்தைகளை எங்களிடம் காண்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.