காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்படும், ஜெயின் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 200- 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயிஷ் இ பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்ததாகவும், பாலகோட், முசாபார்பாத், சக்கோட்டி பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.