தாராபுரத்தில் தனியார் பள்ளி கட்டிடத்தில் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில்செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எங்களது இரண்டு மகள்களான நவ்யா 10ஆம் வகுப்பு மற்றும் திவ்யா 9ஆம் வகுப்பு ஆகியோர் கல்வி பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி அன்று பள்ளியின் கணினி அறையில் எனது மூத்த மகள் நவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல்நிலையத்தில் இருந்து தகவல் அளித்தனர்.
மேலும், பெற்றோர்களின் அனுமதியின்றி பிரேத பரிசோதனையும் செய்துவிட்டார்கள். ஆனால், இத்தனை நாட்கள் ஆகியும் இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை கொடுக்கவில்லை.
இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். எனவே,எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.
இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திருந்தனர். இம்மனுவினை பெற்றுக் கொண்ட ஆட்சியர், முறைப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தார்.