சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் விவகாரத்தில் அவரது சொந்த தாத்தாவை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் சமந்தா என்ற 19 வயது இளம்பெண் கொலையில் நீதி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நியுச்சட்டல் ஏரி அருகே அமைந்துள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து ஜெனீவா நகரை சேர்ந்த சமந்தாவின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் சமந்தாவின் பாடசாலை சக மாணவன் தாமே அவரை கொலை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.
ஆனால் சமந்தா விவகாரத்தில் முழு விசாரணை மேற்கொள்ள முடிவெடுத்துள்ள அதிகாரிகள், இத்தாலியில் குடியிருக்கும் சமந்தாவின் தாத்தாவை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்திலும் இத்தாலியிலும் வைத்து சமந்தாவை பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் அவர் இடம்தரவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது 90 வயதாகும் குறித்த நபரின் மன நலம் தொடர்பில் அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதன் முடிவுகள் வெளியானதும் அவரை விசாரணைக்கு உட்படுத்தலாமா என முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெனீவா நகரில் அந்த நபர் தொடர்பில் குற்றவியல் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
ஆனால் திறமையான வழக்கறிஞர்களால் அந்த வழக்கு விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர் இத்தாலியில் குடியிருந்த வேளையில் ஜெனீவா நீதிமன்றம் அவரை சுவிட்சர்லாந்துக்கு வரவழைக்கும் சட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டனர்.
இதனிடையே இத்தாலி அரசு தாமாகவே இந்த வழக்கை விசாரிக்க முடிவு எடுத்தது.