சற்று நேரத்தில் ஒன்று கூடப்போகும் இந்திய முப்படை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. நேற்று காலை சரியாக 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சுமார் 1 டன் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகளை கொன்று குவித்தது இந்திய விமானப்படை.

இதில் 300- 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயிஷ் இ பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்ததாகவும், பாலகோட், முசாபார்பாத், சக்கோட்டி பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அவசரமாக உயர்நிலை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் மக்கள் சமுதாய தலைவர்கள், ராணுவ தலைவர் ஜெனரல் காமர் ஜாவித் பாஜ்வா உள்ளிட்ட ராணுவ தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இந்தியாவின் தாக்குதல் குறித்தும், தற்போது அங்குள்ள சூழ்நிலை குறித்தும் விளக்கினார்.

இந்த கூட்டத்தில், இந்தியாவின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய வரம்புமீறல் குறித்து உடனடியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நட்பு நாடுகளிடம் புகார் தெரிவிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச அமைப்புகளிடம் இந்த பிரச்சினையை எழுப்பும் வகையில் அவர்களை தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளில் வெளியுறவு அமைச்சர் குரேஷி ஈடுபடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பிரேந்தர் சிங், கடற்படை தளபதி சுனில் லம்பா ஆகியோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சற்று நேரத்தில் சந்திக்க உள்ளனர். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.