சேதமடைந்த நிலையில் புதர் மண்டி காணப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு, சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று திறக்கப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டம் வடவனூரில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தாயார் சத்தியபாமாவின் பரம்பரை வீடு உள்ளது. எம்ஜிஆர், குழந்தை பருவம் தொடங்கி இளைமைக் காலம் வரை வாழ்ந்த அந்த வீடு, அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தது. ஆனாலும், போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்பட்ட அந்த வீட்டை யாருமே சீரமைக்க முன்வரவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, ‘எம்.ஜி.ஆர் வாழ்ந்த வடவனூர் வீடு பராமரிப்பு இன்றி பழுதடைந்து, முட்புதர்கள் மண்டிக் கிடக்கிறது. அதை யாரும் சீரமைக்க முன்வரவில்லை’ என்று, ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி அந்த வீட்டை புனரமைக்க முன்வந்தார்.
தொடர்ந்து, அவருடைய மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி மூலம் ஒரு கோடி ரூபாய் செலவில் அந்த வீடு பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, கேரள மாநில கவர்னர் சதாசிவம் நேற்று (26ம் தேதி), புதுப்பிக்கப்பட்ட அந்த வீட்டை திறந்து வைத்தார். அந்த வீட்டில், எம்.ஜி.ஆரின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் அரிய காட்சிகள் அடங்கிய ஒளி நாடாக்கள், அவரது ஆட்சிக்கால சாதனைகளின் ஒளிநாடாக்கள், அவரது அபூர்வ புகைப்படங்கள், அவர் நடித்த வெற்றி திரைப்படங்களின் சி.டி.க்கள் என பல்வேறு நவீன சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் அவருடைய பெற்றோரின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.