நாங்கள் அவனை நினைத்து பெருமைப்படுகிறோம்… : அபிநந்தனின் தந்தை எழுதிய கண் கலங்கவைக்கும் கடிதம்

நாட்டிற்காக போராடி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருக்கும் தன்னுடைய மகனை நினைத்து பெருமைப்படுவதாக அபிநந்தனின் தந்தை தெரிவித்துள்ளார்.

தாம்பரம் விமானப்படை விமான மையத்தில் பயிற்சி பெற்ற அபிநந்தன் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார்.

கடந்த சில நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், நேற்று காலை எல்லை தாண்டிய பாகிஸ்தான் ராணுவ விமானத்தை விரட்டியடிக்கும் வேலையில் ஈடுபடும்போது தவறி அந்நாட்டு எல்லையில் சிக்கிக்கொண்டார்.

போராட்டக்காரர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியிருந்த போதும் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்து, அதனை வீடியோவாகவும் அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அவரை பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் எனவும், போர் வேண்டாம் எனவும் பொதுமக்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் ஏர் மார்ஷலாக பணியாற்றிய அபிநந்தனின் தந்தை வர்த்தமான், மகன் குறித்து உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

நாங்கள் அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். சம்பவம் குறித்து அக்கறையுடன் விசாரித்த என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி.

கடவுளின் ஆசீர்வாதங்களுக்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அபி இன்னும் உயிருடன் தான் இருக்கிறான். காயங்கள் எதுவும் இல்லை என என் மனதில் ஒலி எழுகிறது.

அவன் மிகவும் தைரியமாக பேசிய விதத்ததை பாருங்கள்… உண்மையான ஒரு வீரன். நாம் அவனை நினைத்து பெருமைப்பட வேண்டும்.

அவன் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்பதற்காக உங்கள் அனைவரின் கைகளும் ஜெபத்துடன் அவன் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்கின்றன என்பதை நான் நம்புகிறேன்.

எந்தவிதமான சித்திரவதைகளையும் அனுபவிக்காமல் அவன் பத்திரமாக வீடு வர வேண்டும் என நான் கடவுளிடம் வேண்டுகிறேன்.

இந்த வேளையில் எங்களுடன் உறுதுணையாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி. உங்களுடைய ஆதரவும், ஆற்றலும் தான் எங்களை இப்போது தேற்றுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளார்.